கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 100 வாக்குகள் வித்தியாசத்தில் கலீல் என்பவர் வெற்றிபெற்றார். இவர் தேர்தலில் போட்டியிடும்போது தான் வெற்றி பெற்றால் வேப்பனஹள்ளி பஞ்சாயத்தை தூய்மையான முதன்மை பஞ்சாயத்தாக மாற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.
இதனையடுத்து அரசின் நிதியை எதிர்பார்க்காத கலீல் தனது சொந்த நிதியில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுவருகிறார். வேப்பனஹள்ளி பஞ்சாயத்தில் பல்வேறு இடங்களிலிருந்த குப்பைகளை அகற்ற சுமார் 3 லட்சம் ரூபாயும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய ஒரு லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
மேலும் நீர்நிலை கால்வாய்களைத் தூர்வாருதல், காய்கறி சந்தை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நான்கு லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளார். அரசு நிதி ஒதுக்குவதற்கு முன் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் சொந்த நிதியில் பணிகளை மேற்கொண்டுவரும் இவரது செயல் அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:
ஊர் குளத்தைத் தூர்வாரி, குளக்கரையில் 400 மரக்கன்றுகள் நட்ட கிராம மக்கள்!