'எண்டோஸ்கோப்பிக் டிரான்ஸ்நாசல் டிரான்ஸ்பெர்டிகோயிட் எக்சிஷன்' என்று அறியப்படும் நுண்-ஊடுருவல் மூளை அறுவை சிகிச்சையில், இரட்டைப் பார்வை பிரச்சினையைச் சரிசெய்ய மண்டையோட்டின் அடிப்பகுதியில் உள்ள நைவுப் புண்ணை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையின்போது காயங்களிலிருந்து நரம்பு மண்டலப் பகுதியைப் பாதுகாக்க, நியூரோ இமேஜிங், நியூரோ நேவிகேஷன் போன்ற தொழில்நுட்பங்களை மருத்துவக் குழுவினர் பயன்படுத்துகின்றனர்.
மூக்கின் வழியாக உள்செலுத்தப்படும் எண்டோஸ்கோப்பிக் கேமராவின் உதவியோடு, மண்டையோட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள கட்டியை அகற்றும் மூளை அறுவை சிகிச்சையை மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை -ஆராய்ச்சி மைய மருத்துவர்கள் குழு தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.
இது குறித்து மருத்துவர் பகத் சிங் கூறியதாவது, "எந்தவொரு மூளை அறுவை சிகிச்சையின்போதும் நரம்பு மண்டல அமைப்பில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மூளையைச் சுற்றி ஊசித்துளையிடுவதன் மூலம் மூளைக்குள் அறுவை சிகிச்சையை எங்களது மருத்துவக்குழு வெற்றிகரமாகச் செய்தது.
இந்த ஊசித்துளை திறப்பு செயற்கையாக மூடப்பட்டது. வெட்டி அகற்றப்பட்ட இந்தப் படலத்திற்குப் பதில் மாற்றுப் படலத்தை இடம்பெறச் செய்வது எதிர்காலத்தில் மூளைக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வராமல் தடுப்பதற்கு முக்கியமாகும்" என்றார்.
இவரைத் தொடர்ந்து நாகேஷ்வரன் என்ற மருத்துவர் பேசுகையில், "தொலைதூரத்தில் உள்ள பொருள்கள் இரட்டை வடிவத்தில் தோன்றுகின்ற பாதிப்பு இருப்பதாக இந்நோயாளி கண்டறியப்பட்டார். மூளையின் வழியாக உள்செலுத்தப்படும் எண்டோஸ்கோப்பியானது பாதுகாப்பானதாகவும், மண்டையோட்டின் அடிப்பகுதியில் உள்ள கட்டிகள் நைவுப்புண்களை அகற்றுவதில் திறன்மிக்கதாகவும் இருந்ததால் இதனை மேற்கொள்ள நாங்கள் முடிவுசெய்தோம்" எனத் தெரிவித்தார்.