கர்நாடகாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று (ஏப். 07) காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
6ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியாளர்கள் பணிக்கு வராததால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கான கர்நாடக அரசுப் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூா் பகுதியிலிருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ஓசூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனா். வேலை நிறுத்தம் காரணமாக பேருந்துகள் வராததால் வேலைக்குச் செல்பவா்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழ்நாட்டில், நேற்று (ஏப்.06) நடைபெற்ற வாக்குப்பதிவிற்காக பெங்களூருவிலிருந்து தமிழ்நாடு வந்தவர்கள் திரும்பிச் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு, தனியார் பேருந்துகள் மட்டும் வழக்கம்போல இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அந்தப் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனா். இருப்பினும் குறைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் அதிகப்படியான கூட்டநெரிசல் காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: அரசியல் கட்சித் தலைவர்களின் தொகுதிகளில் எவ்வளவு விழுக்காடு வாக்குப்பதிவு?