இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால், இதைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் தேனி மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், அண்மையில் புதிதாக 20 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் கரோனா பாதிப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள திருமலாபுரம், டி.ராஜகோபாலன்பட்டி, ரெங்கநாதபுரம் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் கிராமத்தின் எல்லைகளை முள் செடிகளாலும், இரும்பு தடுப்புகளாலும் அடைத்து முடியுள்ளனர். மேலும் தங்கள் கிராமத்திற்குள் வெளியாட்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்றும் எழுதி வைத்துள்ளனர்.