கரூர் அருகே கடவூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்கள் திடீரென பணிகள் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி தலைமையில் நடந்த காத்திருப்புப் போராட்டம் நடந்தது.
இப்போராட்டத்தில் நிறுத்திய ஊரக வேலைவாய்ப்புத்திட்ட வேலைகளை மீண்டும் தொடங்கவும், 100 நாள் வேலை திட்ட நிறுத்தம் குறித்து தமிழ்நாடு அரசு தனி ஆய்வுக் குழு அமைக்கவும்; இல்லையெனில், ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கடந்த ஆறு மாதங்களாக குடும்பம் ஒன்றுக்கு பத்து நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக, நடக்கும் பணிகளை நிறுத்தி வேலை வழங்கப்படாததால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மீண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தின்கீழ் பணிகள் வழங்கக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று (அக்.10) நடந்த காத்திருப்புப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 20 ஊராட்சிகளைச் சேர்ந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்கள் சுமார் 500-க்கும் மேலானோர் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தின்போது, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி அளித்த பிரத்யேக பேட்டியில், 'கரூர் மாவட்டத்தில் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த சில மாதங்களாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் எனும் 100 நாள் வேலை வழங்கும் திட்டத்தில் திடீரென பணிகள் வழங்கப்படாததால் மிகவும் பின்தங்கிய ஏழை மக்கள் வசிக்கும் கடவூர் ஒன்றியத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு தனிக்கவனம் தேவை: மேலும், அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வாங்குவதற்குக் கூட வழியின்றி வறுமையில் தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு 90 நாட்கள் வழங்கப்பட்ட வேலையில் தற்பொழுது வெறும் பத்து நாட்கள் மட்டுமே பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பைச் சந்தித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு நடத்த வேண்டும். ஏன் திடீரென பணிகள் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டது என்பது குறித்து தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
முழு ஊதியம் வழங்கவில்லை: கரூர் மாவட்ட ஆட்சியர் எவ்வித நிபந்தனையும் இன்று மீண்டும் பணி ஆணைகளை வழங்குவதற்கு நிர்வாக அனுமதி தர வேண்டும். மேலும் சட்ட ரீதியாக தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய நிர்ணயிக்கப்பட்ட சட்ட ஊதியம் ரூபாய் 282 அனைவருக்கும் முறையாக வழங்கப்படுவதில்லை தற்போது 210 முதல் 230 வரை மட்டும் ஊதியம் வழங்கப்படுவதாகவும் நிர்ணயிக்கப்பட்ட சட்ட ஊதியம் முழுமையாக வழங்கப்படுவது இல்லை. எனவே, தமிழ்நாடு அரசு முறையான விசாரணை நடத்தி முழுமையான ஊதியம் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறைந்த நிதி ஒதுக்கீடு: திமுகவின் அரசு தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டம் என்பது 150 நாட்கள் வேலை நாட்களாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்து ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால், ஓராண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மத்தியில ஆளும் பாஜக ஒன்றிய அரசு ஒவ்வொரு நிதி ஆண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை குறைத்து வழங்கி வருகிறது.
ஒன்றிய அரசுக்கு அழுத்தம்: கடந்த ஆண்டு நான்கு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிதியில், தற்போது வெறும் 70 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கிடும் அளவைவிட தமிழ்நாட்டிற்கு குறைவாக ஒதுக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு போதிய நிதியை தமிழ்நாட்டிற்குப் பெற்றுத்தர ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
ஒன்றிய அலுவலகங்கள் முற்றுகை: ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் அதிகாலை 7 மணிக்கு பணிக்குச்சென்று புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என ஒன்றிய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிமுறைகளை வகுத்துள்ளது. இதனால், கிராமப்புறத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறத்தில் உள்ள நீர் நிலைகள், இயற்கை வளங்கள் வலுப்படுத்துவதற்குத்தேவையான திட்டங்களை வகுத்துப்பணிகள் வழங்க தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கடவூர் ஊராட்சி ஒன்றியம் மட்டுமல்லாது தமிழ்நாடு அளவில் தற்பொழுது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆ.ராசா வருமானத்தை விட 579 விழுக்காடு அதிகமாக சொத்து சேர்த்தார் - சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்