கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், " அதிமுகவிலிருந்து வென்ற மூன்று எம்எல்ஏக்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் செல்வாக்கால் வென்றவர்கள். ஆனால், தற்போது அமமுகவில் இணைந்து இருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். அதோடு கட்சியில் முக்கிய பொறுப்பும் வகித்து வருகின்றனர். ஆனால் தற்போது அப்படி பொறுப்புக்கள் எதுவும் இல்லை என்றும் அமமுகவில் இணையவில்லை என்றும் முன்னுக்குப் பின் முரணான கருத்தை மூன்று பேரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
அவர்கள் அதிமுகவிற்கு எதிராக இருக்கிறார்கள் என புகார் வந்ததன் அடிப்படையில் தலைமை கொறடா அதனை சட்டப் பேரவைத் தலைவரிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து மூன்று பேரும் 7 நாளில் அதற்கான விளக்க கடிதங்களை எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
நியாயமானவர்கள், தன் மீது தவறு இல்லாதவர்கள், அதற்கான விளக்கங்களை அளிக்காமல் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவை தலைவருக்கும் விளக்கம் அளித்துள்ளது. இதனால் அதிமுகவிற்கு எந்த விதமான பின்னடைவும் கிடையாது " என்றார்.