கரூர்: உழைப்பாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கரூரில் கடைவீதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (ஜூலை 23) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது உழைப்பாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமகோபால தண்டாள்வார் அளித்த பேட்டியில் , “இந்தியாவில் கடந்த 16 ஆண்டுகளாக ஜாதி வாரியான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை இதனால் மிகவும் பின்தங்கி உள்ள சமூகத்தில் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய இட ஒதுக்கீடு சலுகைகள் கல்வி வேலைவாய்ப்பில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
50 லட்சம் மக்கள் தொகை கொண்ட போயர் சமூகம் தமிழகத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. சாதிவரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொண்டு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 5 சதவீத தனி இட ஒதுக்கீடு போயர் சமூகத்திற்கு வழங்க வேண்டும்.இந்தியாவில் கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கென தனி நல வாரியம் செயல்பட்டு வருகிறது.ஆனால் தமிழகத்தில் இதுவரை கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் தனி நிலவாரியம் அமைக்கப்படவில்லை.
இதையும் படிங்க: "என் தாய், தந்தை, குழந்தைகளுக்கும் மேலாக காட்பாடி தொகுதியை நேசிக்கிறேன்" - அமைச்சர் துரைமுருகன்!
போயர் சமூகத்தின் 15 வருட கோரிக்கையான போயர், ஒட்டர், பண்டி, கொட்டா உள்ளிட்ட சமூகங்களை ஒன்றிணைத்து கல் உடைப்போர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை 2006ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை தற்போதைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். கட்டுமான நல வாரியத்தில் ஓய்வூதியமாக வழங்கப்படும். ரூபாய் 1000 என்பதை புதுடெல்லி மாநில அரசு வழங்குவதைப் போல, தமிழகத்தில் ரூபாய் 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்” என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும் பேசியவர், “ தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும். இன்று உழைக்கும் மக்களும் இளைஞர்களும் மதுவுக்கு அடிமையாகி சமூகத்தில் குற்றங்கள் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைந்து வருவதால் தமிழக அரசு விரைவில் பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.
எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் உழைப்பாளி மக்கள் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதால் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்போம். கடந்த முறை திமுக கூட்டணியில் அங்கம் வகித்த உழைப்பாளி மக்கள் கட்சிக்கு சில காரணங்களால் சட்டப்பேரவையில் குரல் எழுப்ப போயர் சமூகத்திற்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.
எனவே இம்முறை அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்போம் இல்லாவிட்டால் தனித்து 2024 மக்களவைத் தேர்தலில் கொங்கு மேற்கு மண்டலத்தில் போட்டியிட்டு எங்களது வாக்கு சதவீதத்தை உயர்த்துவோம்” என மாநில செயற்குழு கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுத்துள்ளதாக உழைப்பாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமகோபால தண்டாள்வார் பேட்டி அளித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது மாநில பொருளாளர் தேக்கமலை, பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாநிலச் செயலாளர் முருகேசன், மாநிலத் துணைத் தலைவர் மாணிக்கம், மாநில துணைச் செயலாளர் எஸ்.எம்.கே குமரன், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் என்ஐஏ சோதனை நிறைவு - குற்றவாளிகளைப் பிடித்து தருபவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம்