கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையில், மதிமுக மாணவரணி மாநில செயலாளர் பால சசிகுமார் - திவ்யா திருமணத்தினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆகியோர் தலைமையேற்று நடத்தி வைத்தனர்.
திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வைகோ, "தரம் தாழ்ந்து பேசுவதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை மிஞ்ச முடியாது. இன்று ஒரு பேச்சு பேசுபவர், நாளை அதை மறுத்து பேசுகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை அழித்துவிடலாம் என்று நினைத்து பேச ஆரம்பித்தவர், இந்தியால் தமிழை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டு, தற்போது மூக்கறுபட்டு போய் விட்டார்.
தற்போது தமிழக முதல்வர் சொல்வதை கேட்கும் நிலைமைக்கு தமிழக ஆளுநர் வந்துள்ளார். அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தினமும் ஏதோ ஒன்றை பேசுகிறார். யாரைப் பற்றி தான் பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை, அவராலும் எதையும் நிரூபிக்க முடியாது.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திமுக அரசு, திராவிட மாடல் அரசு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் நாள்தோறும் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், அதில் வெற்றியும் காண்கிறார்" என்று கூறினார்.
இதையும் படிங்க: சொத்துப்பட்டியல் விவகாரம்: அடுத்த குறி அதிமுக? - அண்ணாமலையின் அரசியல் கணக்கு என்ன?