கரூர்: வெங்கமேடு அம்மன் நகர் 2ஆவது வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி என்கிற பிரபு (33). இவர், கடந்த 2012ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகேவுள்ள வாழைகொம்பு கிராமத்தைச் சேர்ந்த ஜோதிமுருகேஸ்வரி (30) என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும், திருமணத்தின்போது பத்து சவரன் தங்க நகையும், சீர் பாத்திரங்களும், தனிக் குடித்தனம் நடத்துவதற்கு தேவையான பொருள்கள் உள்ளிட்டவைகளை, பிரபு வரதட்சணையாக பெற்றார்.
திருமணமாகி ஓர் ஆண்டுக்குப் பிறகு கரூரிலிருந்து பிரசவத்திற்காக தனது தாய் வீடு பொள்ளாச்சிக்கு ஜோதிமுருகேஸ்வரி சென்றுள்ளார். இந்த இடைவெளியில் கரூரில் உள்ள ஹெச்டிஎஃப்சி தனியார் வங்கியில் பணியாற்றும் நித்யா என்ற பெண்ணுக்கும், பிரபுவுக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இது ஜோதிமுருகேஸ்வரிக்கு தெரியவந்ததால் இது குறித்து பிரபுவுடன் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ஜோதிமுருகேஸ்வரி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மூன்று திருமணம் செய்த பிரபு
பிரபுவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாததால், 2016ஆம் ஆண்டு ஜோதிமுருகேஸ்வரி கரூர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கை தொடர்ந்தார். இந்நிலையில், விவாகரத்து பெறாமல் பிரபு, நித்யா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கை பயன்படுத்தி தெரிந்த உறவுக்காரர்களை அழைக்காமல் எளிமையாக கோயிலில் வைத்து சுதா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.
இதனையறித்த முதல் மனைவி ஜோதிமுருகேஸ்வரி, விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள பொழுதே அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்த பிரபு குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது 8 வயது மகனுடன் சென்று புகார் அளித்தார்.
சிறையில் அடைப்பு
மூன்று திருமணங்கள் நடந்ததற்கான புகைப்பட ஆதாரங்களையும் காவல் நிலையத்தில் கொடுத்தார். இதனடிப்படையில் பிரபு, அவரது குடும்பத்தாரிடம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சித்ராதேவி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், விவாகரத்து பெறாமல் மேலும் இரண்டு திருமணம் செய்து கொண்டதை ஒப்புக்கொண்டனர்.
பின்னர், பிரபு, அவரது தந்தை ராமசாமி, தாய் தேவநாயகி, இரண்டாவது மனைவி நித்யா, மூன்றாவது மனைவி சுதா, பாலசுப்ரமணியின் சகோதரிகள் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 494 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபுவை கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணியாக்கி ஏமாற்றிய காதலனை போராடி மணந்த இளம்பெண்!