கரூர்: கரூர் நகராட்சிக்குள்பட்ட படிக்கட்டு துறை, காந்திநகர் நகர் நியாயவிலைக் கடையில் கரோனா நிவாரண உதவித்தொகை இரண்டாம் தவணை ரூ.2000, 14 வகையான மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்.
இன்றிலிருந்து இரண்டாயிரம்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் ஊரடங்கினால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சென்ற மாதம் நியாய விலைக்கடைகள் மூலம் முதல் தவணைத் தொகையாக ரூ.2000 வழங்கப்பட்டது.
தற்போது இரண்டாம் தவணையாக இன்று (ஜூன் 15) அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படுகிறது. இதனால் 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைத்தாரர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இதற்காக தமிழ்நாடு அரசு 8 ஆயிரத்து 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக அரசு, கடன் சுமையை தற்போதைய அரசுக்கு வழங்கி சென்றுள்ள சூழ்நிலையில், ஏழை, எளிய மக்களின் நிலையை கருத்தில்கொண்டு அரசு நிவாரண உதவித் தொகையை வழங்குகிறது" என்றார்.
உச்சத்திலும் விற்றது அதிமுக
இதைத்தொடர்ந்து, மதுக்கடைகளை திறப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்ததைக் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அப்பொழுது இருந்த அதிமுக அரசு கரோனா உச்சத்தில் இருந்தபோது மதுக்கடைகளை திறந்துவைத்து மது விற்பனை செய்தது.
எண்ணிக்கையை குறைத்து விற்கிறது திமுக
அப்பொழுது ராமதாஸ் அமைதியாக இருந்தார். தற்போது படிப்படியாக உச்சத்திலிருந்த தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கி, தளர்வு அறிவிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மட்டும் மது விற்பனை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்று (ஜூன் 14) கூட பாஜக சார்பில் மதுக்கடைகளை திறக்க கூடாது என போராட்டம் நடத்தியதாக கேள்வியுற்றேன்.
அனைவருக்கமான நல்லரசு
அவர்கள் மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை, அரசியலுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை பயன்படுத்தி வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்கள் அதிக அளவில் தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வருவதைத் தடுப்பதற்கும், கள்ளச்சாரய விற்பனையை தடுப்பதற்காகவும் தான் அரசு உரியக் கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறந்துள்ளது. தமிழ்நாடு அரசு அனைவருக்குமான நல்லரசாக செயல்பட்டு வருகிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு பத்தரை - இது டெல்லியின் ஒதுக்கீடு!