குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்திவருகின்றனர். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய இந்த கையெழுத்து இயக்கம் கரூர் திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வுமான செந்தில்பாலாஜி, கரூர் எம்.பி. ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜியிடம், தற்போதைய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது இப்போதுதான் செந்தில்பாலாஜி மீது வழக்குகள் பாய தொடங்கியுள்ளன. இன்னும் போக போக எத்தனை வழக்குகள் பாயும் என கூறியது குறித்து கேட்கபட்ட கேள்விக்கு, பதிலளித்த அவர், ஒரு பொதுக்கூட்டத்தில் முதல் வழக்கு இப்போதுதான் பதிவாகியிருக்கிறது. இன்னும் எத்தனை வழக்குகள் பாயும் என ஆளும் அதிகாரத்தில் இருப்பவர் கூறுகின்றார் என்றால் காவல் துறையை இவர்கள் எப்படி பயன்படுத்தி வருகிறார்கள் என நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். அவர்,எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை நீதிமன்றத்தில் நேர்மையான முறையிலேயே சந்தித்து நிரபராதி என நிரூபித்து வருவேன். நீங்கள் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் கவலைப்படமாட்டேன் என பதிலடி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், வீட்டிற்கு சோதனைக்கு வந்த காவல் துறையினர் எனது தாய், தந்தையை துன்புறுத்தி, தனது சகோதரன் வீட்டில் சோதனையின்போது வேலை செய்த நபரை அடித்திருக்கின்றனர். எனது டெக்ஸ் நிறுவனத்திலிருந்து எந்தவிதமான ஆவணமும் கிடைக்கவில்லை, ஆனால் வங்கி புத்தகம், காசோலை, வரி செலுத்திய ஆவணங்கள், சென்னையிலுள்ள என் வீட்டில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 790 ரூபாயை காவல் துறையினர் எடுத்திருக்கின்றனர் என பகிரங்கமாக கூறினார்.
மேலும், ஆளுங்கட்சி பொய்யான, அதுவும் நீதிமன்றத்தில் முடிந்துபோன வழக்கை மறுபடி வேறு ஒரு நபரை வைத்து பொய்யாக ஜோடித்து வழக்கு கொடுத்திருக்கின்றது. 2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் நான் வெற்றி அடைந்துவிடுவேன் என்ற பயத்தில் பொய்யான வழக்குகள் சுமத்துகின்றனர். எந்த வழக்கு போட்டாலும் அதனை எதிர்கொள்வேன், புறமுதுகு காட்டி ஓடி விட மாட்டோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:‘பாஜகவின் கருத்தையே ரஜினியும் பேசுகிறார்’ - கனிமொழி எம்.பி.