கரூர் மாவட்டம் பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய தனியார் மண்டபத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு வழிபாடாக அன்பு தழைக்கவும், உறவுகள் மேம்படவும் பிள்ளையார் நோன்பு விழாவினை கொண்டாடுவது வழக்கம். திருவண்ணாமலை தீபத்தன்று விரதம் தொடங்கி 21 நாள் விரதமிருந்து சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் பொது இடங்களில் ஒன்றுகூடி இந்த விழா நடைபெறும்.
அந்தவகையில் முப்பத்தி நான்காவது ஆண்டு பிள்ளையார் நோன்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவிளக்கில் பிள்ளையார் பிடித்து, விநாயகர் முன் சமுதாயப் பெரியவர்கள் மரியாதை செய்து, விநாயகரை அலங்கரித்து வழிபாடு செய்து நோன்பை கலைத்தனர். பூஜையில் கலந்துகொண்ட சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பூஜையில் வைக்கப்பட்ட உப்பு, சர்க்கரை, கல்கண்டு, மஞ்சள், மாலை, விளக்கு, சட்டை, பேரீச்சை, குழந்தை சட்டை, பிள்ளையார் உருவப்படம், எலுமிச்சம்பழம் உள்ளிட்ட 21 மங்களப் பொருள்கள் ஏலத்தில் விடப்பட்டன. இதில் உப்பு ரூ.30 ஆயித்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டது. மேலும், 2 லட்சத்திற்கும் அதிகமாக பூஜை பொருள்கள் ஏலம்போயின.
இந்த விழாவில் மாவட்டத்தின் பல பகுதிகளில் வாழும் நகரத்தார் சமுதாயத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சமூகவலைதளத்தில் வைரலான செய்தி: ஒரு மணி நேரத்தில் மூதாட்டிக்கு கிடைத்த உதவித்தொகை