கரூர் மாவட்டத்திலுள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது கணவருடன் வந்த புதுமண பெண், சாதி மறுப்பு திருமணம் செய்த தங்களை தனது பெற்றோர் மிரட்டுவதாக கூறி அவர்கள் மீது புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், “ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகள் பிரியதர்ஷினி எனும் நானும், கரூர் மாவட்டம் சணப்பிரட்டி கிராமம் மகாலிங்கம் மகன் தினேஷ்குமார் என்பவரும் கடந்த நான்கு வருடமாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
சாதி மறுப்பு திருமணம்
எனவே எங்கள் காதல் விவகாரத்தை எங்களின் பெற்றோரிடம் தெரிவித்தபோது எனது தந்தை ராஜா, எனது தாயார் காவேரி, எனது அண்ணன் லட்சுமணன் ஆகியோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், எங்கள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நாங்கள் இருவரும் மாயனூரிலுள்ள செல்லாண்டியம்மன் திருக்கோயிலில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோம்.
நாங்கள் இருவரும் இந்து திருமணச் சட்டப்படி திருமண வயதை எட்டியுள்ளோம். எனது பெற்றோரிடம் இருந்து எனது கணவரையும், என்னையும் காப்பாற்றி பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
பெற்றொரிடம் பேச்சுவார்த்தை
எனது பெற்றோர் எங்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி எங்களை வரச்சொல்லி மிரட்டுகின்றனர். சாதி பெயரைச் சொல்லி பிரிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற புதுமண தம்பதி, காவல் துறையினரின் உதவியுடன் பெண்ணின் பெற்றோரை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால், பெண்ணின் பெற்றோர் காதல் கணவனை விட்டுவிட்டு வந்தால் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் இல்லாவிட்டால் மகளே இல்லை என்று நினைத்துக்கொள்வதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
பின்னர், கணவரின் பெற்றோரை அழைத்த மகளிர் காவல் துறையினர், அவர்களை சமாதானம் செய்து காதல் தம்பதியை அவர்களுடன் அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: திருமணமான மூன்றே மாதங்களில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை!