கரூர்: குடகனாறு நீர் தேக்கத்திலிருந்து கரூர் வெள்ளியணை குளத்திற்கு உபரி நீர் கொண்டுசெல்லுதல் தொடர்பாக அழகாபுரி குடகனாறு நீர்த் தேக்கத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "முதலமைச்சரின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடகனாறு அணையிலிருந்து உபரிநீரை சுமார் 100 கன அடி அளவிற்குக் கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை குளத்திற்கு விவசாய தேவைக்காகக் கொண்டு செல்வதற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
தண்ணீர் வெள்ளியணை குளத்திற்குச் சென்று அடைந்தவுடன் 110 கன அடி அளவிற்குத் தண்ணீர் அளவு அதிகரிக்கப்படும். தொடர்ந்து வெள்ளியணை குளத்திற்குச் செல்லும் வாய்க்கால் 52 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளது. இதில் 110 கன அடி நீர் அளவு மட்டுமே கொண்டு செல்ல முடியும். எனவே இனிவரும் காலங்களில் 200 கன அடி நீர் அதிகபட்சமான அளவு தண்ணீரைக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திட்ட மதிப்பீடு தயார்
தற்போது 52 கீ.மீட்டர் அளவுள்ள வெள்ளியணை வாய்க்கால் 26 கிலோ மீட்டர் தொலைவிற்கு மட்டுமே கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 26கிலோமீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் தளம் அமைப்பதன் மூலம் சுமார் 110 கன அடி நீரை அதிகப்படுத்தி 200 கன அடி நீர் அளவுக்குக் கொண்டு செல்ல திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
2 கதவணைகள்
மேலும், குடகனாறு அணையில் 1976 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது சேதமடைந்த ஷட்டர்கள் சரி செய்யப்பட்டு அணையின் மொத்த கொள்ளளவான 27 அடி அளவிற்கு உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த அமைச்சர், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிதாகத் தமிழ்நாட்டில் 6 கதவணைகள் அமைப்பதற்குத் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் இரண்டு கதவணைகள் கரூர் மாவட்டத்தில் அமைய உள்ளது.
சிந்தித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை
தமிழ்நாட்டில் மழையளவு அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் நீர் தேக்கப்படும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை விவசாயத்திற்கு எப்படி பயனுள்ளதாகப் பயன்படுத்துவது என்பதைத் தமிழ்நாடு அரசு சிந்தித்து அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி கடந்த கால ஆட்சியில் நீர் சேமிப்பு இல்லாத கட்டமைப்புகளை மாற்றியமைப்பதற்குத் தமிழ்நாட்டிலுள்ள நதிகள், ஆறுகள், தடுப்பணைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகத் முதலமைச்சர் உத்தரவு இருப்பதால் ஆய்வுப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது
இதனால், குடகனாறு அணையில் பழுதடைந்துள்ள 5 ஷட்டர்கள் சரி செய்யப்பட்டு அதன் முழு கொள்ளளவான 27 அடி அளவிற்குத் தண்ணீர் சேமிப்பு வைக்க பொதுப்பணித்துறை அலுவலர்கள் மூலம் ரூ.28 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கரூர் ஈசநத்தம் பகுதியில் வெள்ளியணை குளத்திற்குச் செல்லும் நீரை மலர் தூவி அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்றார்.
இந்நிகழ்வின்போது, வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் காந்திராஜன், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: நீர் தேங்குகிறது என்ற பேச்சுக்கே இடமளிக்கக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு