மக்கள் நீதி மய்யம் சார்பில் கரூரில் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜ் கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் மு வடநேரே, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் கரூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிகமாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்கு எண்னும் மைய முகவர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூட இருப்பதால் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வாக்கு எண்ணும் மையத்தில் கலந்துகொள்ளும் வாக்கு எண்ணும் முகவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பெரும்பாலும் அதிமுக திமுக சார்பில் சுயேச்சை வேட்பாளர்களாக அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் வழக்கறிஞர்கள் அவர்களுக்கு முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள அவர்கள் குற்றப் பின்னணி உள்ளவர்களாக இருக்கின்றனர்.
இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினரைத் தவிர்த்து வேறு மாநில காவலர்களையும், கூடுதல் துணை இராணுவ படையை கொண்டு வாக்கு எண்ணிக்கையை அமைதியாக நடத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய கரூர் சட்டப்பேரவை வேட்பாளர் மோகன்ராஜ், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி, அதேபோல அதிக புகார்களும் தேர்தல் ஆணையத்தில் பதிவான தொகுதி கரூர் தொகுதி தான்.
அதிமுக சார்பில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் திமுக சார்பில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் இத்தொகுதியில் போட்டியிடுவதால், கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுயேச்சைகளாக இருவரின் ஆதரவாளர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பணியாற்றுவதற்கு நியமித்துள்ள வாக்கு எண்ணும் முகவர்களாக இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும், வன்முறை நிகழ்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே எங்களது மக்கள் நீதி மய்ய முகவர்கள் தேர்தல் மையத்திற்குச் செல்ல பயப்படுகின்றனர்.
இப்பயத்தை போக்கும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர்களும், மாநில தேர்தல் ஆணையமும் தலையிட்டு மே 2ம் தேதிக்கு முன்னதாக வேறு மாநில காவல்துறையினரையும், கூடுதல் துணை இராணுவத்தினரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்