கரூர் மாவட்டத்திற்குள்பட்ட கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்பாலாஜி, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வெங்கக்கல்பட்டி, தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி, பாரதிதாசன் நகர், கணபதிபாளையம், வாஞ்சிநாதன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் அவருக்கு உற்சாகமாக ஆரத்தி எடுத்தும் மலர்கள் தூவியும் வரவேற்பளித்தனர். அதுமட்டுமின்றி, தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி முன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு கிருஷ்ணராயபுரம் இளைஞரணி பொறுப்பாளர் யுவராஜ் பிரபாகரன் இரண்டு ஆயிரம் கவுளிகள் கொண்ட வெற்றிலை மாலையை அணிவித்து வரவேற்பளித்தார்.
பின்னர் மக்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, "வெற்றியை உறுதி செய்யும் வகையில் வெற்றிலை மாலையும், மலர்தூவியும் உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ளீர்கள். இந்த வெற்றியை வரும் வாக்குப்பதிவு நாளில் உறுதி செய்ய வேண்டும். தனது வாழ்நாள் முழுவதும் இந்தத் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக அர்பணித்துள்ளேன்.
திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எண்ணற்ற திட்டத்தை அறிவித்துள்ளார். அத்தனையும் பெற்றுத் தருவதற்கு நான் உறுதுணையாக இருப்பேன். தமிழ்நாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும் அறிவித்துள்ளார். படித்தவர்கள் நம்பிக்கையுடன் இருங்கள், திமுக ஆட்சியில் நிச்சயம் அரசு வேலை வழங்கப்படும் " எனத் தெரிவித்தார்.