கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்யல், சேமங்கி, நடையனூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகைப்பூ விவசாயம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தற்போது கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக, செடிகளில் பூத்துக் குலுங்கும் மல்லிகைப் பூக்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமல், பூச்செடியில் பூக்களை பறிக்காமல் விடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து மல்லிகைப்பூ விவசாயம் செய்யும் பெண்மணி கூறுகையில், மல்லிகைப்பூவால் நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தது.
தற்போது 144 தடை உத்தரவு காரணமாக, 15 நாட்களுக்கும் மேலாக மல்லிகைப் பூக்கள் சந்தைக்குக் கொண்டு போக முடியாமல் செடிகள் பழுத்து காய்ந்துவருகின்றது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு இழப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.