கோவையில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானி, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் வழியே பயணித்து கரூர் மாவட்டத்தின் நொய்யல் கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், ஆற்றில் நீர்வரத்து மிகக்குறைவாகவே இருந்துவந்தது.
இந்நிலையில், மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்துவரும் மழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மூன்றாவது நாளான இன்று நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, தற்போது 2 ஆயிரம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கும், மீன் பிடிப்பதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மழை பெய்து நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கரோனா!