கரூர்: தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என முன்னாள் அமைச்சர் சின்னசாமி தெரிவித்தார்.
கரூர் மாவட்ட அதிமுகவில் மிக பிரபலமாக இருந்த முன்னாள் அமைச்சர் சின்னசாமி, 1980, 1999 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். மேலும் தொழில்துறை அமைச்சராகவும், அதிமுக ஆட்சியில் இருந்தவர். பின்னர் 1999-ல் கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளராக இருந்த இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் சின்னசாமி வேட்பாளராக போட்டியிட்டு, அதிமுக தம்பிதுரையிடம் 1,95,247 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இருப்பினும் திமுக தலைமை அவருக்கு மாநில விவசாய அணி செயலாளர் பொறுப்பு அளித்தது. அதன்பின்னர் நடைபெற்ற 2016 சட்டபேரவை தேர்தலில் அவருக்கு திமுக வாய்ப்பு வழங்கவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்காததால், அதிருப்தியில் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்தும், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை எதிர்த்தும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்து மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதனிடையே அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சின்னசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் தெரிவித்தது:
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். என்னுடைய கணிப்புப்படி 120 இடங்களுக்கு மேல் அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழகத்தில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கருத்துக் கணிப்புகளை நம்பமுடியாது. மக்களின் மனநிலை மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க வேண்டும் என வாக்களித்துள்ளார்கள். குறிப்பாக தாய்மார்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. ஏனெனில் அவர் ஒரு சாதாரணமான விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்.
எளிதில் அணுகக்கூடிய முதல்வர் பழனிசாமி. அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் உள்ளது.
இதை ஆங்கிலத்தில் படிக்க: 'Karnan', a context; the real ‘Podiyankulam’, & a 1st person account