கரூர்: குளித்தலை நகராட்சி 8ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 340 சேலைகளைப் தேர்தல் பறக்கும்படை கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து முக்கியக் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 24 மணி நேர பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர்.
இதனிடையே குளித்தலை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பறக்கும்படை அலுவலர்கள் பறக்கும்படை அலுவலரான புகழேந்தி தலைமையிலான காவல் துறையினர் குளித்தலை நகராட்சிக்குள்பட்ட எட்டாவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசங்கரி செந்தில்குமார் என்பவருக்கு ஆதரவாக வாக்காளர்கள் வாக்களிக்க இலவசமாகப் புதிய சேலைகள் வழங்கப்படுவதாகப் புகார் வந்துள்ளது.
மூட்டை மூட்டையாகச் சேலைகள்
இதையடுத்து அங்குச் சென்ற பறக்கும் படை அலுவலர் புகழேந்தி, காவல் துறையினர் அங்கு உள்ள பொதுமக்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது குளித்தலை பேராளம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள வேட்பாளரின் கணவருக்குச் சொந்தமான நகைக்கடை ஒன்றில் புடவைகள் மறைத்துவைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்தக் கடைக்குச் சென்ற அலுவலர்கள் மூட்டை மூட்டையாகப் புதிய சேலைகளைப் பறிமுதல்செய்தனர்.
பின்னர் மீண்டும் அந்தக் கடைக்குச் சென்ற பறக்கும் படை அலுவலர், நகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புராம், குளித்தலை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் ஆகியோர் கடைக்குள் சென்று தீவிர சோதனை செய்தனர். அப்போது அந்தக் கடைக்குள் மூட்டையில் மேலும் சில புதிய சேலைகள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்துள்ளது.
அதிமுக வேட்பாளர் மீது புகார்!
அதனைத் தொடர்ந்து அனைத்துப் புடவைகளையும் அவர்கள் பறிமுதல்செய்து நகராட்சி அலுவலகத்திற்குக் கொண்டுசென்றனர். இந்தச் சோதனையில் மொத்தம் 340 புடவைகள் அலுவலர்களால் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு அளிக்கப் புடவைகளை வைத்திருந்த அதிமுக வேட்பாளர் மீது தேர்தல் நடத்தும் அலுவலர் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இன்று குளித்தலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில் அதிமுக வேட்பாளரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட புதிய சேலைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: ஸ்டாலின் ஆற்றிய அரும்பணியால் கரோனா குறைந்தது - ஆ.ராசா