கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த சுதா என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். பட்டியலின அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இவர், நன்னீயூர் ஊராட்சியில் உள்ள துவரபாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வாங்கல் காவல் நிலையத்தில் நேற்றைய முன்தினம் (செப் 22) புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள என்னை, நன்னியூர் ஊராட்சி 9வது வார்டு அதிமுக உறுப்பினர் நல்லுசாமி ஊராட்சி மன்ற தலைவர் பணியை மேற்கொள்ள விடாமல் சாதி ரீதியாக பாகுபாட்டுடன் இடையூறு செய்து வருகிறார்.
அவருக்கு ஆதரவாக திமுகவைச் சேர்ந்த நன்னியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குமாரசாமியும் இணைந்து பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து வருகின்றனர்.
மேலும் இருவரின் தூண்டுதல் பெயரில் அலுவலகப் பணியில் ஒத்துழைப்பு கொடுக்காத ஊராட்சி செயலர் நளினி மற்றும் அவருடைய கணவர் மூர்த்தி ஆகியோர் தேவையில்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் தினமும் எனக்கு பல்வேறு வகையில் சாதி ரீதியான பாகுபாடு காட்டுவதுடன், எனது பணியினை மேற்கொள்ள விடாமல் இடையூறு செய்து வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் லீலாகுமார் (தணிக்கை) மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் நேற்று (செப் 23) நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த புகார் தொடர்பாக இரு தரப்பிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: 'பஞ்சமி நிலத்தை மீட்டுத் தருக' - தேனி அருகே குடிசைகள் அமைத்துப்பட்டியலின மக்கள் போராட்டம்