கரூர்: வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கில், கரூர் கீழமை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட திமுகவினர் 19 பேருக்கும் ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வருமானவரித்துறை சார்பில் ஜாமீனை ரத்து செய்யக்கோரி வழக்குத்தொடரப்பட்டது. அதன்பின் நீதிபதி இளங்கோவன் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
கரூரில் மே 25ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு அமைந்துள்ள ராமகிருஷ்ணபுரத்தில் சோதனையிடச்சென்றபோது, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுகவினர் வருமானவரித்துறை அதிகாரிகளை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல கரூர் ராயலூரில் மே 25ஆம் தேதி கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் சுப்பிரமணி வீடு மற்றும் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனையிடச் சென்றபோது, வருமானவரித்துறை அதிகாரிகளை திமுகவினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அதேசமயம் அதிகாரிகள் தங்களை தாக்கியதாகவும் திமுகவினர் குற்றம்சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் சோதனை நடத்த வருமான வரித்துறை திட்டமிட்ட நிலையில், இதில் 7 இடங்களில் தொண்டர்கள் இடையூறால் சோதனை நடத்த முடியவில்லை என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையால் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடக்கவிருந்த மாமன்றக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் 50 திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 19 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கினை முதலில் விசாரித்த கீழமை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 19 பேருக்கும் ஜாமீன் வழங்கியது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வருமான வரித்துறை சார்பில் ஜாமீனை ரத்து செய்யக்கோரி வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை கடந்த ஜூலை 28ஆம் தேதி விசாரித்த நீதிபதி இளங்கோவன் வருமானவரித் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் மூன்று நாட்களில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் திமுகவினர் 15 பேரும் சரணடைய வேண்டும்; பின்னர் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டால் முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பிக்கலாம் என தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்ற உத்தரவில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இன்று கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் திமுகவினர் 15 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
இதனால் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாலை 4 மணி நிலவரப்படி, நீதிபதிகள் இதுவரை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 17 வயது சிறுமி கருக்கலைப்பு விவகாரத்தில் லட்சக்கணக்கில் லஞ்சம் - பெண் இன்ஸ்பெக்டர் கைது!