சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் இருந்து 10கி.மீ. தொலைவில் வட்டக்கோட்டை உள்ளது. திருவாங்கூர் சமஸ்தானத்தால் கட்டப்பட்ட கடல் கோட்டைகளில் இதுவே கடைசி கோட்டை. வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோட்டையைக் காண தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வட்டக்கோட்டையை சுற்றிப் பார்த்துவிட்டு சுற்றுலாப் பயணிகள் அதனருகில் இருக்கும் அரசு சிறுவர் பூங்காவை ஓய்வெடுக்கவும், உணவருந்தவும், சிறுவர்கள் விளையாடவும் பயன்படுத்திவந்தனர்.
இந்நிலையில், தற்போது இந்தப் பூங்காவில் உள்ள பெயர்ப்பலகை, படிக்கட்டுகள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவைகள் பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கின்றன. மேலும், பூங்காவிற்குள் முட்செடிகள், கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகின்றன. இதனை குடிமகன்கள் இரவு நேர பாராக பயன்படுத்திவருகின்றனர். இதனால் பூங்காவில் எங்கு பார்த்தாலும் குப்பைகளும், மதுபாட்டில்களும் காணப்படுகின்றன. இந்த சிறுவர் பூங்காவை மாவட்ட நிர்வாகம் பராமரித்து மீண்டும் திறக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.