கன்னியாகுமரி: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில், நாட்டின் எல்லைப் பகுதிகள் மற்றும் டெல்லியில் இருப்பதுபோல் மிக உயரமான கம்பத்தில் தேசிய கொடிக்கம்பம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டது. அதன் அடிப்படையில் மாநிலங்களவை எம்.பி விஜயகுமாரின் நிதியில் இருந்து, கன்னியாகுமரி சமாதானபுரம் நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள ரவுண்டானா சந்திப்பில் சுமார் 148 அடி உயரம் கொண்ட தேசிய கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.
இவ்வாறு அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில், இன்று (ஜூன் 29) 48 அடி நீளமும் 32 அடி உயரமும் கொண்ட இந்திய தேசியக்கொடியை தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாநிலங்களவை எம்.பி. விஜயகுமார் ஆகியோர் ஏற்றி வைத்தனர். இந்நிகழ்வில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நயினார் நாகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்திய ராணுவத்தில் பணியாற்றி விடுமுறையில் குமரி மாவட்டம் வந்துள்ள ராணுவ வீரர்கள் கையில் கொடியை ஏந்தினர். தொடர்ந்து மின்சார இயந்திரம் மூலம் கொடி ஏற்றப்பட்டது. இதுவே தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய கொடிக்கம்பம் ஆகும். மேலும் ஆண்டின் அனைத்து நாட்களும் இரவும் பகலுமாக பறக்க விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவிலும் சுற்றுலாப் பயணிகள் கொடியை கண்டுகளிப்பதற்கு வசதியாக மின்னொளியில் மிளிர செய்வதற்கான மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரட்டை இலை விவகாரம்: கையெழுத்திட போட முன்வந்த ஓபிஎஸ்... மறுத்த ஈபிஎஸ்...