கன்னியாகுமரி: அரபிக் கடல் பகுதிகளில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டினம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. தேங்காய் பட்டனம் மீன்பிடித் துறைமுகம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் இதன் கட்டுமான பணிகளில் குளறுபடி ஏற்பட்ட காரணத்தால் துறைமுக நுழைவாயிலில் அலைகளால் மணல் மேடுகள் உருவாகி உள்ளதால் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டு உள்ளே நுழையும் போது விசைபடகுகள் மணல் மேட்டில் சிக்கி கடலில் தூக்கி வீசப்பட்டு 15 க்கு மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை பல விசைப்படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்துள்ளது. பலமுறை அரசிடம் துறைமுகத்தின் நுழைவாயிலை சீரமைத்து தர கோரிக்கை வைத்தும், அரசு தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் முடங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று ஏற்பட்ட விபத்தில் பூத்துறை கிராமத்தை சார்ந்த சைமன், வயது 52 என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு மீனவர்கள் காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு தங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளாததால் கேரளாவுக்கு இடம் பெயர்ந்து அங்கு சென்று மீன்பிடி தொழில் செய்யலாம் என்ற முடிவுக்கு தேங்காய்பட்டினம் மீனவர்கள் வந்துள்ளனர். ”எங்களை மீண்டும் கேரளாவோடு இணைத்து விட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்” என மீனவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கையில் தட்டு ஏந்தி பிச்சை கேட்டு நூதன முறையில் போராட்டம்