கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மார்கழி மாத பெரும் திருவிழா 10 நாள்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பெருந்திருவிழா வரும் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஜனவரி மாதம் 5ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், முக்கியத் திருவிழாவான ஜனவரி மாதம் 4ஆம் தேதி 9ஆம் நாள் திருவிழா அன்று தேரோட்ட திருவிழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் தொடக்கமாக இன்று (டிச.08) இந்த விழாவிற்கான கால்கோள் விழா நடைபெற்றது. கோயிலில் மூலவருக்கு சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர் பூஜைகள் செய்து எடுத்து வரப்பட்ட கால்கோளை கோயிலில் முன்பக்கம் உள்ள பாகத்தில் கோயில் பூசாரிகள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மேளதாளங்கள் முழங்க நட்டனர்.
இதனைத் தொடர்ந்து விழாவுக்கான ஏற்பாடுகளான ரத வீதிகளில் தேர் வருவதற்கான ஏற்பாடுகள் அதேபோன்று முஷிக வாகனம், புஷ்ப வாகனம், இந்திர வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட சுவாமி வீதி உலா வருவதற்கான வாகனங்களைத் தயார்படுத்தும் பணிகளிலும் கோயில் பூசாரிகளும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: அய்யங்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்