தென் மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கியதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஐந்து தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக மேற்கு கடற்கரையில் சில கிராமங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு நீரோடையில் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது . மேலும் மீன் பிடி இறங்கு தளம் முற்றிலுமாக சேதமடைந்தது.
இந்நிலையில் கடல் அலைகள் 20-அடிக்கும் மேல் எழும்பியதால், வள்ளவிளை பகுதியிலுள்ள செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் கடல் நீர் புகுந்தது. இந்த அலை சீற்றத்தால் வள்ளவிளை கிராமத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்து காணப்படுகின்றன.
ஏற்கனவே இதை தடுப்பதற்காக போடப்பட்ட கடல் அரிப்பு தடுப்பு சுவர் சரியாக போடாததால்தான் வீடுகள் இடிய காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அரசு அலுவலர்கள் வந்து பார்வையிடவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்குவதுடன் போர்க்கால அடிப்படையில் கடல் அரிப்பு தடுப்பு சுவரை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.