கன்னியாகுமரி மாவட்டம் சாமியார் மடத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவர், கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி முதல் தொல்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக பணியாளராக பணியமர்த்தப்பட்டார்.
கரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியை செய்து வந்தார். இதனிடையே, மருத்துவமனை நிர்வாகம் அவரை வேலையை விட்டு நிறுத்தியதாக தெரிகிறது. கரோனா நேரத்தில் வேலையிழந்த ராஜேஷ், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்நிலையில், நாகர்கோவில் அருகே தனியார் கட்டடத்தின் மேல் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரும் அவரை பத்திரமாக மீட்டனர்.
அப்போது, "கரோனாவால் பாதிக்கப்பட்ட முகம் பேர் தெரியாத எத்தனையோ பேரை காப்பாத்தியிருக்கிறேன். இரவு பகலென்று தூக்கமில்லாமல் உயிரை பணையம் வைத்து வேலை பாத்திருக்கிறேன். வேலையிழந்து 18 நாள் ஆகிறது. எனக்கு உதவி செய்ய யாருமில்லை" என்று கண்ணீருடன் தெரிவித்த ராஜேஷுக்கு காவல்துறையினர் ஆறுதல் கூறினர்.
இதையும் படிங்க: 'அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது' - நயினார் நாகேந்திரன்