கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரசின் செயல் தலைவருமாக இருந்த ஹெச்.வசந்தகுமார், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று (ஆக.28) மாலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். வசந்தகுமாரின் மறைவிற்கு நாட்டின் முக்கியத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் கடைகள் அனைத்தும் இன்று (ஆக.29) காலை முதல் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகள், வீடுகளில் கறுப்புக் கொடி கட்டப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கட்சி அலுவலகத்திலும், அவரது வீட்டிலும் வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்திற்கு, உறவினர்களும், நண்பர்களும், தொண்டர்களும், ஊர் மக்களும் நேற்று இரவு முதலே மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குமரி மாவட்டப் பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி பேனர்கள் பரவலாக வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவரது உடல் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் பகுதியில் நாளை (ஆக. 30) நல்லடக்கம் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது தந்தை, தாயாரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள அதே கல்லறைத் தோட்டத்திலேயே, வசந்த குமாரின் உடலும் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும் முகாமிட்டு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட வசந்த குமார் உடல் - அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்