சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவதற்காக செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி செல்வதற்காக எம்.எல்.பொதிகை, எம்.எல்.குகன், எம்.எல்.விவேகானந்தா ஆகிய மூன்று படகுகள் இயக்கப்படுகின்றன.
சுற்றுலா சீசன் நேரங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் கூடுதல் படகுகள் இயக்க வேண்டுமென்று சுற்றுலாப் பயணிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் புதிதாக இரண்டு சொகுசு படகுகள் வாங்க சுமார் 8.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரியில் வைத்து அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த படகு கட்டுமான பணிகள் கோவாவில் உள்ள தனியார் படகு கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்த சூழலில் தற்போது ஒரு படகின் பணிகள் முழுமையாக நிறைவடைந்து எம்.எல். தாமிரபரணி என்ற பெயரில் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகு துறையை வந்தடைந்தது. இதனை கோட்டாட்சியர் மயில் ஆய்வு செய்தார்.
படகு குறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக அலுவலர்கள் கூறுகையில், "கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் பணியில் தற்போது மூன்று படகுகள் ஈடுபட்டுள்ளன.
சீசன் நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி புதிதாக இரண்டு படகுகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதில் பணிகள் முடிக்கப்பட்டு எம்.எல். தாமிரபரணி சொகுசு படகு இங்கு வந்துள்ளது. மற்றொரு படகான எம்.எல்.திருவள்ளுவர் படகு 90 சதவீதம் பணி நிறைவடைந்தது அதுவும் விரைவில் கன்னியாகுமரிக்கு வரவுள்ளது.
இந்தப் படகு சுமார் 26 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும், ஒரே நேரத்தில் 75 பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ள இந்த படகு கரோனா ஊடங்கு முடிந்த பின் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு விடப்படும்" என்றார்.
இதையும் படிங்க: வாயுக்கசிவால் தீ: மக்களுக்கு மூச்சுத்திணறல் - குமரியில் அச்சம்!