கன்னியாகுமரி மகாதானபுரம் அருகே நரி குளம் உள்ளது. இக்குளத்தின் குறுக்கே நான்கு வழி சாலை செல்கிறது. இதற்காக 22 கோடி ரூபாய் மதிப்பில் குளத்தின் குறுக்கே இணைப்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் குளத்திலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
கொட்டாரம், கன்னியாகுமரி பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமாகவும் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் இந்தக் குளம் முக்கியமாக உள்ளது.
இந்நிலையில் குளத்தை சீரமைத்து கரையை பலப்படுத்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குளத்திலிருந்து மண் எடுத்து வேறு இடத்துக்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை.
தற்போது குளத்தில் இருந்து பெருமளவில் மண்ணெடுத்து வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்துவருகின்றனர். மண் எடுப்பதற்கு வசதியாக குளத்து நீரை மோட்டார் மூலம் அகற்றி வீணடித்து வருகின்றனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மண் எடுப்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை போடப்பட்ட புதிய பாலத்தின் கீழ் பகுதியில் ஆழமாக மண் தோண்டுகின்றனர்.
இதனால் மழை பெய்து குளத்தில் தண்ணீர் நிரப்பும்போது பாலத்தின் தூண் சேதம் அடையும் அபாயம் உள்ளது. எனவே அலுவலர்கள் நிகழ்விடத்தை உடனடியாக பார்வையிட்டு விதிமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.