கன்னியாகுமரி: கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை பவனி இன்று(ஏப்-2)நடைபெற்றது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது. முன்பு யூதர்கள் எருசலேம் நகரில் ஒன்று கூடி பஸ்கா விழாவை கொண்டாடுவது வழக்கம். அமைதியின் தூதனாய் இயேசு கழுதையின் மீது ஏறி எருசலேம் நகருக்குச் சென்று, அன்றைய நாளின் மக்களுக்கு அமைதியின் செய்தியைக் கூறியதை இந்த நாள் நினைவு கூருகிறது.
அப்போது அங்கு கூடியிருந்த மக்களை வரவேற்பு கொடுக்கும் விதமாக ஒலிவ் மர குருத்து இலைகளால் வழிநெடுகிலும் பரப்பினர். மேலும், பலர் இலைகளை தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு தாவீதின் குமாரனுக்கு ''ஓசன்னா, உன்னதங்களில் ஓசன்னா’’ என்று பாடல்கள் பாடி, மகிழ்ந்து இயேசுவை எருசலேம் நகருக்கு அழைத்துச் சென்றனர். அந்த காலங்களில் எருசலேம் மக்கள் ஒலிவ் மர குருத்து இலைகளை கையில் ஏந்தி, இயேசுவை வரவேற்றது போல, இன்றும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் தென்னைமரத்தில் உள்ள குருத்து ஓலைகளை எடுத்து, அதை கைகளில் ஏந்தியபடி, பாடல்களை பாடி ஊர்வலமாகச் செல்வது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் இந்நாளை ஆண்டுதோறும் குருத்தோலை ஞாயிறு திருநாளாக கொண்டாடுகிறார்கள். இதனால், இந்த வாரம் புனித வாரம் என அழைக்கப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள புகழ்பெற்ற கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் பக்தர்களுக்கு குருத்தோலைகள் வழங்கப்பட்டு, அவற்றை கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் ஏந்தியபடி ''ஓசன்னா'' பாடல் பாடி பவனியில் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஆலயத்தில் திருப்பலி மற்றும் சிறப்பு வழிபாடுகள் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசேரேன் சூசை தலைமையில் நடைபெற்றது. மேலும், தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கி உள்ளது. வரும் வியாழக்கிழமை பாதம் கழுவும் நிகழ்ச்சியும், திருப்பலியும், வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடும் திருச்சிலுவை பாதை நிகழ்ச்சியும் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா கொண்டாடப்பட உள்ளது.
இதையும் படிங்க: Autism Awareness Day : உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் - ஊனம் நீக்கி உலகம் ஒன்றுபடுவோம்!