கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாத் தலத்திற்கு பெயர் பெற்ற மாவட்டம் ஆகும். இங்கு முக்கடல் சங்கமம், திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை, கடல் நடுவே விவேகானந்தர் பாறை, பிரசித்திப்பெற்ற பகவதி அம்மன் கோயில் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இடங்கள் அமைந்துள்ளன.
இதனை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் 15 நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புகளையும் சுற்றுலாத் தலங்களை விளக்கும் வண்ணம் சுற்றுலாத் துறை சார்பில் கோடை விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த 15 நாட்களும் அனைத்துத் துறைகளின் சார்பில் விவசாயம், வேளாண்மைத் துறை, சுற்றுலாத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, கல்வித் துறை என அனைத்துத் துறைகளும் இணைந்து 15 நாட்களும் ஒவ்வொரு துறைகள் சார்பில் விழாக்கள் நடைபெறும்.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்வார்கள். கோடை விடுமுறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புகளையும், வரலாற்றுத் தன்மைகளையும் அறிந்துகொள்ள ஏதுவாக அமைந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் தேர்தல் நடந்த காரணத்தினால் இந்த கோடை விழா நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆளுங்கட்சி சார்பில் எம்எல்ஏக்கள் இல்லாததே இதற்கு காரணம். அதனால் மாவட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், இம்மாவட்டத்தின் பிரதிநிதியாக அரசிடம் கோரிக்கை வைக்க இங்கு ஆட்கள் இல்லை. எனவே இங்கிருந்து வெற்றிபெற்று சென்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் அரசிடம் எடுத்துச் சொல்லி அடுத்த வருடமாவது கோடை விழா கொண்டாட்டம் கன்னியாகுமரியில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.