இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வெளிநாடுகளில் வேலை, கல்வி, சார்பு நுழைவு இசைவு கோரும் இந்தியர்கள் வெளிநாட்டுத் தூதர்கள், வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு கல்விச் சான்றிதழ், பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ்கள் போன்ற பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் முத்திரையிடப்பட வேண்டும் என்று சில நாடுகள் வலியுறுத்துகின்றன. இந்த ஆவணங்களை இணையவழியில் சரிபார்த்து முத்திரையிடுவதற்கு ஏதுவாக மத்திய அரசு 'இ-சனாட்' என்ற இணையவழிச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசின்கீழ் இயங்கும் அனைத்து மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் பிறப்பு, திருமணச் சான்றிதழ்கள் இ-சனாட் இணையவழி மூலம் சரிபார்க்கப்பட்டு முத்திரையிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோர் தொடர்புடைய தூதரகங்கள் முத்திரையிடப்பட்ட சான்றிதழ்கள் கோரும்பட்சத்தில் பொதுமக்கள் 'www.esanad.nic.in ' என்று இணையத்தில் விவரங்கள் பதிவுசெய்து ஆவணங்களை பிடிஎஃப் வடிவில் பதிவேற்றம்செய்து உரிய கட்டணம் செலுத்தினால் இணையவழியில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் அவரவர் வீடுகளுக்குச் சான்றிதழ்கள் அனுப்பிவைக்கப்படும்.
எனவே தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளபடி இந்த இணையவழிச் சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிபந்தனைகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பேனர்களுக்கு தடை