'புரெவி' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி முழுவதும் உள்ள பகுதிகளில் ஆட்டோவில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புயல் குறித்து விழிப்புணர்வு பரப்புரையில் பொதுமக்களுக்கு, "நாகர்கோயில் பகுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மேலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களான பேட்டரியில் இயங்கும் டார்ச் லைட், போதுமான பேட்டரிகள், மெழுகுவத்திகள், தீப்பெட்டிகள் ஆகியவற்றை போதுமான அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மின்கம்பங்கள், தெரு விளக்குகள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லவோ அல்லது தொடவோ வேண்டாம். வீடுகளில் மின்சாதனப் பொருள்களை கவனமாக கையாள வேண்டும். மேலும் வருகின்ற டிச. 4ஆம் தேதி வரை பெரும் மழையும் புயலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்" என ஆட்டோக்கள் மூலமும் வாகனங்கள் மூலமும் தெருத்தெருவாகப் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேபோல் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆணையர் ஆஷா அஜித் வீடுவீடாகச் சென்று அறிவுரைகளை வழங்கினார். மேலும் நிவாரண முகாம்களை அவர் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: புரெவி புயல்: பாம்பன் துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்