கன்னியாகுமரி: முதல் பருவ நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அரசு தரப்பில் குளங்கள் பராமரிப்பு பணிகள் காலதாமதமாக செய்ததால் விவசாயமும் காலதாமதமாக தொடங்கப்பட்டது. நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் உள்ள பணியாளர்களை விவசாய பணியில் இருந்து மாற்று பணிகளுக்கு அரசு அதிகாரிகள் அழைத்துச் செல்வதால் விவசாய பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை உரிய நேரத்தில் பெய்ய தொடங்கியதால் பேச்சிப்பாறை உள்ளிட்ட முக்கிய அணைகளிலும் மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களில் தண்ணீர் போதுமான அளவு உள்ளது. இதனால் விவசாய பணிகள் தடையின்றி நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில் செண்பகராமன்புதூர், தோவாளை , தேரூர் மற்றும் மாவட்டம் முழுவதும் முதல் பருவ நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அம்பை 16, டிபிஎஸ் உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளன. கோடை காலத்தில் உரிய நேரத்தில் அரசு பாசன குளங்களை பராமரிப்பு பணிகள் செய்யாததால் விவசாயம் ஒரு மாத காலம் கடந்து தொடங்கப்பட்டுள்ளது.
இதே போல் உரங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயத்தில் லாபம் குறைவாக கிடைக்கும் என்றும் விவசாயப் பணிகளுக்கு வந்த பணியாளர்களை 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அதிகாரிகள் மாற்று பணிகளுக்கு அழைத்து சென்று விட்டதால் நெல் சாகுபடி பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
ஆள் பற்றாக்குறை மற்றும் உரங்களின் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக நாற்றங்கால் அமைத்து நாற்று நடும் சாகுபடி முறை ஒருபுறம் நடைபெற்றாலும் ஆள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பகுதிகளில் பொடி விதைப்பு முறைப்படி நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் முதலிடத்திற்கு முன்னேறிய குமரி மாவட்டம்!