குமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த அசம்பு சாலை பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (73). இவர் வடசேரி பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கடையில் வியாபாரம் நல்லபடியாக இருந்தும் கூட கல்லாவில் பணம் சேரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், நன்கு வியாபாரம் நடந்தும் பணம் சேராத காரணம் குறித்து தெரிந்து கொள்வதற்காக கடையில் உள்ள ஊழியர்களுக்குத் தெரியாமல் கண்காணிப்பு கேமரா ஒன்றைப் பொருத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது, அவரது கடையில் வேலைப் பார்க்கும் ஊழியரான தோவாளை பகுதியைச் சேர்ந்த மணி என்ற வீரபத்திரன் என்பவர், கல்லாப்பெட்டியில் இருக்கும் பணத்தைத் தொடர்ந்து திருடி வந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.
அதையடுத்து தேவேந்திரன், வீரபத்திரன் மீது வடசேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர் வீரபத்திரன் மீது வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீரபத்திரன் இந்த கடையில் வேலைக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் ஆகின்றது என்றும்; பத்து ஆண்டுகளாக சுமார் 15 லட்சம் ரூபாய் வரை திருடி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் காவல்துறை தேடுவதை அறிந்து வீரபத்திரன் தலைமறைவானார். அவரை வடசேரி காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படியுங்க:
லாரி பேட்டரிகள் திருட்டு: சிசிடிவி காட்சியின் மூலம் விசாரணை!