கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து இங்கு தங்கியிருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இதுவரை ஆயிரக்கணக்கானோர் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (மே 27) உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 515 பேர் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, வரவழைக்கப்பட்டு அங்கிருந்து அரசுப்பேருந்து மூலம் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், இவர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், பழம் போன்ற பொருட்களை காங்கிரஸ் கட்சியின் புலம்பெயர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கரோனா!