கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பள்ளிவிளை பகுதியில் அமைந்துள்ளது சி.எஸ்.ஐ. பேராலயம். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த பேராலயத்தில் சபை போதகராக அருட்தந்தை டி.மாணிக்கராஜ் நியமிக்கப்பட்டார்.
அவர் பொறுப்பேற்ற நாள் முதல் அந்தப் பேராலய பங்கு மக்களில் ஒருவராக இருந்து அனைவருக்கும் உதவிகள் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. பொதுவாக பேராலய போதகராக நியமிக்கப்படுபவர்களின் பதவிக்காலம் ஐந்து வருடமாகும்.
ஆனால், தற்போது மூன்று வருடங்கள் மட்டுமே முடிவுற்ற நிலையில் குமரி பேராயம் போதகர் மாணிக்கராஜை இடம் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை ஏற்றுக்கொள்ளாத பேராலய பங்கு மக்கள் நாகர்கோவிலில் அமைந்துள்ள கன்னியாகுமரி பேராய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனிடையே, போராட்டம் நடத்தியவர்களின் கோரிக்கையை பேராய நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து, முற்றுகைப் போராட்டம் நடத்திய பங்கு மக்கள் திடீரென கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களின் போராட்டத்தை தொடர்ந்து அப்பகுதி மக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என பேராய நிர்வாகம் தெரிவித்துள்ளது.