கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடி முனையில் சர்வதேச சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது. இங்கு முக்கடல் சங்கமம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கடல் படகு போக்குவரத்து, பிரசித்திப்பெற்ற பகவதி அம்மன் கோயில், சூரிய எழுதல், மறைதல் ஆகியவை புகழ்பெற்றவையாகும். இங்கு உள்நாடு மட்டுமல்லாமல் வெளி நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர் .
கோடை விடுமுறை சீசன் முடியக்கூடிய காலகட்டத்தில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் தற்போது வந்த வண்ணம் உள்ளனர். இங்கு சுற்றுலா வரும் பெரும்பாலானவர்கள் தனியார் தங்கும் விடுதிகளில் வந்து தங்கி சூரிய எழுதல், மறைதலை கண்டுகளித்து-விட்டுச் செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் தனியார் தங்கும் விடுதிகளில் கட்டணம் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தனியார் தங்கும் விடுதிகளில் விலைப்பட்டியல் கட்டாயம் வைக்க வேண்டும், இதை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் தங்கும் விடுதிகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.