கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகேயுள்ள ஈச்சன்விளைப் பகுதியைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் தன் மகளுடன் அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கால்வலி சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு சர்க்கரை அளவு அறிய ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.
அன்று மாலையில் சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவருக்கு எடுக்கப்பட்ட சளி மாதிரியில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையினர் அவரை தொடர்புகொண்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதனால் அந்த பெண் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தார்.
![Medical Report](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8843223_knk.jpg)
உடனே அவரது குடும்பத்தினர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சளி மாதிரி பரிசோதனை மேற்கொண்டனர். அதில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதனால் சம்மந்தப்பட்ட பெண்ணும் குடும்பத்தினரும் நிம்மதி அடைந்தனர். இருந்தும் தங்களது பதிவேட்டில் கரோனா தொற்று உறுதி என பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர், இரண்டு நாட்களுக்காவது அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற வேண்டும் என, மருத்துவமனை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தாங்கள் தனியார் மருத்துவமனையில் எடுத்த சோதைனயில் கரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது என சொல்லி அப்பெண் சிகிச்சைக்கு வர மறுத்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் காவல் துறையில் புகார் தெரிவிக்க, அந்தப் பெண் வீட்டிற்குச் சென்ற காவல் துறையினர், கண்டிப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தினர். இதனால் தொற்று இல்லாத ஒருவர் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் அனுதிக்கப்பட்டால் அவருக்கும் தொற்று ஏற்படும் என குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். சளி மாதிரி எடுக்காமலேயே கரோனா தொற்று உறுதி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : கோவையில் கரோனா பரிசோதனை முடிவில் குழப்பம்!