கன்னியாகுமரி மாவட்டம் முருகன் குன்றத்தில் அமைந்துள்ள வேல்முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சூரசம்ஹாரம் முடிந்து சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு காலையில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளும், அதனைத்தொடர்ந்து சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி தொடங்கியது.
இதற்காக கோயிலில் இருந்து அம்பாள் விக்கிரகங்கள் எடுத்துவரப்பட்டு கோயில் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமரவைத்தனர். அதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவத்திற்கு பழம், இனிப்பு வகைகள், முறுக்கு, அதிரசம் போன்ற பல்வேறு பொருள்களை சீர்வரிசையாக எடுத்துவந்து திருகல்யாண மேடைக்கு கொண்டுவந்தனர்.
பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானையுடன் முருகபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புரோகிதர்கள் வேதமந்திரம் ஒலிக்க, மங்கள வாத்தியம் முழங்க சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடந்தது.
தொடர்ந்து வாகனத்தில் முருகன் குன்றத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கந்தசஷ்டி விழா: ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!