உலகமெங்கும் கரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. தற்போது இந்தியாவிலும் 340-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரசின் பாதிப்பு இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த 19ஆம் தேதி இந்திய மக்களிடம் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 22ஆம் தேதி அதாவது இன்று இந்திய மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என அழைப்புவிடுத்திருந்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பையடுத்து பெரிய வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகள், கடைகள் என அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அன்று ஒருநாள் மூடப்படும் என வியாபார சங்கங்கள் அறிவித்து, இன்று முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் இன்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இதன்படி கன்னியாகுமரி பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் திறக்கப்படாமல் மூடியே காணப்படுகின்றன.
மேலும் அதிகாலை முதலே கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளான திரிவேணி சங்கம பகுதி, கடற்கரை சாலை, கடற்கரை, பகவதியம்மன் கோயில் சன்னதி தெரு ஆகியன வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
ஆனால் கன்னியாகுமரி பகுதிகளில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் யாரும் சாலைகளில் சுற்றித்திரியாதவாறும் இந்தப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் நுழைந்து விடாதவறும் கண்காணித்துவருகின்றனர்.
சாலைகளில் சுற்றித்திரியும் நபர்களைக் காவல் துறையினர் அழைத்து எச்சரித்து திருப்பி அனுப்பிவைக்கின்றனர். இதனால் மக்கள் கூட்டமின்றி கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்படுகிறது.
குமரி வரலாற்றில் கதிரவன் எழுதலைப் பார்க்க முக்கடல் சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகள் இல்லாத நாள் இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வுப் பாடலை வெளியிட்ட புத்தர் கலைக் குழு