கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பவரும் டெம்போ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இதில் கார்த்திக் அந்த இளம்பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனை அப்பெண் ஏற்க மறுத்ததால், அவர் வேலை பார்க்கும் கம்ப்யூட்டர் சென்டரில் சென்று கார்த்திக் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, அந்த இளம்பெண் வீட்டிலிருந்து பேருந்தில் வந்து செல்லும்போதும், கார்த்திக் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அப்பெண் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் அப்பெண்ணின் வீட்டுச் சுவரில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொணியில் எழுதியது மட்டுமல்லாமல், வீட்டின் முன் நின்றிருந்த வேனின் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பெண்ணின் வீட்டார் ஏற்கனவே காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 19) அந்தப் பெண் தனது வீட்டருகே உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு சென்ற கார்த்திக், தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி தொந்தரவு செய்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்த்திடாத அப்பெண், எப்படியோ கார்த்திக்கிடம் இருந்து தப்பித்து தனது வீட்டிற்கு ஓடி வந்துள்ளார்.
ஆனால், விடாது அவரைப் பின் தொடர்ந்து வந்த கார்த்திக், பெண்ணின் உறவினரான பிரதாப் என்பவருக்கு (வயது 33) வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, அவருக்குச் சொந்தமான கார், வேன் ஆகியவற்றின் கண்ணாடிகளை அடித்து உடைத்துவிட்டு, அப்போதும் ஆத்திரம் அடங்காமல் பிரதாப்பை கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். இந்தச் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வரவே, கார்த்திக் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் பிரதாப் புகார் செய்துள்ளார். அதனடிப்படையில், தப்பியோடிய கார்த்திக்கை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க...கரோனாவால் கைதிகளின் கைவினைப்பொருள்கள் தயாரிக்கும் பணி நிறுத்தம்!