குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெப்பச் சலனம் காரணமாகக் கனமழை பெய்து வந்த நிலையில், யாஸ் புயலினால் ஏற்பட்ட கன மழை காரணமாக நாகர்கோவில், குலசேகரம், பூதப்பாண்டி, மார்த்தாண்டம், திங்கள் சந்தை, அருமனை, குளச்சல் உள்பட மாவட்டம் முழுவதும் பல இடங்கள் மழை வெள்ளத்தால் சூழ்ந்தன.
ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு, திருவரம்பு, திருவட்டார், பேச்சிப்பாறை, சுசீந்திரம், தேரூர், புதுக்கிராமம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்தன. இதனால் கிராம மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். தீயணைப்புத்துறை, பேரிடர் மேலாண்மை குழு, காவல் துறையினர் ஆகியோர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இப்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசுப் பள்ளி கட்டடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட தற்காலிக தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முகாம்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களான உணவு, உடை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
இன்று (மே.27) காலை நிலவரப்படி அதிகபட்சமாக மயிலாடி பகுதியில் 93.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனையடுத்து பேச்சிப்பாறை 90.6 மிமீ, சுருளகோடு 62.4மிமீ, களியால் 60 மிமீ, பெருஞ்சாணி 59 மிமீ, கன்னிமார் 57 மிமீ, நாகர்கோவில் 53.4 மிமீ என்ற அளவில் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
அதேபோல 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 43.86 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 5,819 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து 6,508 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1 அணையில் 16.70 கன அடி, சிற்றார் 2 அணையில் 16.80 கன அடி, 42.65 அடி அளவை கொண்ட பொய்கை அணையில் 25.60 அடி தண்ணீர் இருப்பில் உள்ளது. மாம்பழத்துறையாறு தனது முழு கொள்ளளவான 54.12 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு 135 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது.