கன்னியாகுமரி: கணினியை ஹேக் செய்து டாலரில் பணம் கேட்டு மிரட்டும் நபர்களிடமிருந்து, ஆவணங்களை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ண சிவன் பிள்ளை. இவர் அப்பகுதியில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் நடத்திவந்தார்.
பொதுமக்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, இ கிசான் உழவர் அட்டை உள்ளிட்டவற்றில் திருத்தம் செய்யும் பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 3ஆம் தேதி இவரது கணினி ஹேக் செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட ஆவணங்களை திரும்பப் பெற பணம் கேட்டு மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
டாலரில் பணம் கேட்டு மிரட்டல்
இது குறித்து அவர் பேசுகையில், “என்னை நம்பி ஏராளமானோர் தங்களது ஆவணங்களை கொடுத்து வைத்திருந்தனர். இந்நிலையில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கணினியை ஹேக் செய்த நபர்கள், அதில் இருந்த ஆவணங்களை திருடிவிட்டனர்.
மேலும் ஆவணங்களை திரும்ப தர, டாலரில் பணம் செலுத்த வேண்டும் என பேரம் பேசுகின்றனர். இதனால் ஹேக் செய்தவர்கள் யார் என கண்டறிந்து, ஆவணங்களை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.
இதையும் படிங்க: தொழில் அமைத்து தருவதாக ரூ.2 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்