குமரி மாவட்டத்தில் உள்ள குளங்களை ஆழப்படுத்தி தண்ணீரைச் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனடிப்படையில், குளங்களை ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதன்படி, ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு 33 பாஸ் வழங்கப்பட்டது. அந்த பாஸை பயன்படுத்தி விவசாயிகள் மண்ணை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், இந்தப் பணிகள் பொதுப்பணித் துறை அலுவலர்களின் மேற்பார்வையில் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், விதிமுறைகளைப் பின்பற்றாமல் பொதுமக்கள் அவர்கள் இஷ்டத்துக்கு மண் எடுப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் வந்தன.
இந்நிலையில், குளங்களில் மண் எடுப்பதில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், அதற்கு அரசு அலுவலர்கள் துணை போனதாகவும் எழுந்து புகாரைத் தொடர்ந்து, எந்தக் குளத்திலும் மண் எடுக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் திடீர் தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில்தான் அதிகளவு விவசாய குளங்கள் உள்ளன. இந்தக் குளங்களில் மண் தூர்வாராமல் இருப்பதால், மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்க வசதி இல்லாமல் வீணாகக் கடலில் கலக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, முறையாகத் தூர்வாரும் பணியை அரசு நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.