தமிழ்நாட்டில் உள்ள நாட்டுப்படகு மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியத்தை மத்திய அரசு, தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது. இதன் மூலம் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் மானியத்துடன் சேர்த்து ரூ.25-க்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மத்திய அரசு நேரடியாக வழங்கும் மானியத்தை ரத்து செய்து மீனவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் ஆறாயிரத்துக்கும் அதிகமான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்துவருகிறார்கள். இவர்களை நம்பி ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை இருந்துவருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் நாட்டுப்படகு மீனவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் மானியத்தை வங்கியின் மூலமாக வழங்கும் மத்திய அரசின் முடிவை மாநில அரசு ஏற்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீனவர்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.