கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்காலிகமாக ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டி மற்றும் ஒரு தூங்கும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மே மாதம் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
அதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஏசி மூன்றடுக்கு பெட்டி மற்றும் ஒரு தூங்கும் வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியும் வரும் மே மாதம் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஏசி மூன்றடுக்கு பெட்டி மற்றும் நான்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வசதி மே மாதம் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடை காலத்தை முன்னிட்டு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வசதியினை ரயில் பயணிகள் உபயோகப்படுத்தி பயனடையுமாறு தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.