கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (44), அருள் (45) ஆகிய இருவரும் உறவினர்கள். இவர்களது உறவுக்கார பெண் ஒருவரை இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்துள்ளார். இதனால் சில நாள்களுக்கு முன் அந்த இளைஞரைச் சந்தித்து ஆனந்தும் அருளும் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் இறச்சகுளம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது இருவரையும் வழிமறித்து இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக குத்தியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிருக்குப் போராடி கொண்டிருந்த அருளை அப்பகுதியினர் மீட்டு நாகர்கோவில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து பூதப்பாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் தப்பியோடியவர்களையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.